கோலாலம்பூர்:
ஷா ஆலம் பகுதியில் தொடர்ச்சியாக கேபிள் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த 6 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மே 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் மூலம் இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது.
சமீபத்தில் ஷா ஆலம், செக்ஷன் 2-ல் டெலிகோம் மலேசியா (TM) நிறுவனத்திற்குச் சொந்தமான கேபிள்கள் திருடப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (D4) பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
26 முதல் 40 வயதுக்குட்பட்ட 6 சந்தேக நபர்கள் கடந்த ஆறு நாட்களில் (மே 4 முதல் 9 வரை) கைது செய்யப்பட்டனர் என்று, ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் ராம்சே எம்போல் (ACP Ramsay Embol) கூறினார்.
விசாரணையில் இவர்களில் ஒவ்வொருவர் மீதும் ஏற்கனவே 7 முதல் 31 வரையிலான குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது” என்று சொன்னார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் போதைப்பொருள் பரிசோதனையில் ஆம்பெட்டமைன் (Amphetamine) மற்றும் மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடி சோதனையின் போது, கேபிள்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள், மூன்று ரோல் டெலிகோம் மலேசியா கேபிள்கள் மற்றும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய நிசான் நவாரா (Nissan Navara) ரக வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் விசாரணை அதிகாரி முகமட் அமிருல் சுல்கிப்ளியை (Insp Mohammad Amirul Zulkifli) 012-558 3436 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணையில் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



















