அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூரில் தடை: நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை அமல்

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமீறல்கள், வாகன நிறுத்தம் அல்லது புகை உமிழ்வு தொடர்பான அபராதங்களைச் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, அபராத நிலுவை வைத்துள்ள வாகனங்களுக்கு வரும் நவம்பர் 2 முதல் வாகன நுழைவு அனுமதி (VEP) மற்றும் அதன் புதுப்பித்தல் சேவைகள் மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள நடைமுறைப்படி, அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்கள் சிங்கப்பூர் எல்லைச் சோதனைச் சாவடிகளுக்கு வரும்போதுதான் அவற்றின் நுழைவு தடுக்கப்படுகிறது.

இனிமேல், வாகன ஓட்டிகள் தங்களின் VEP அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போதே அபராத நிலுவை இருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னதாகவே பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
1. அபராதத்தைச் சரிபார்த்தல்: முதலில் axs.com.sg என்ற இணையதளம் வழியாக தங்களின் வாகனத்தின் மீது ஏதேனும் நிலுவை அபராதங்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

2. பணம் செலுத்துதல்: நிலுவைத் தொகை இருந்தால் அவற்றை உடனடியாகச் செலுத்த வேண்டும்.

3. அனுமதி கோருதல்: அபராதங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்ட பின்னரே, LTA OneMotoring இணையதளத்தில் நுழைவு அனுமதியைப் புதுப்பிக்கவோ அல்லது புதிய அனுமதி பெறவோ முடியும்.

இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் எல்லைச் சோதனைச் சாவடிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here