ஜார்ஜ்டவுன்:
பினாங்கில் சமீபகாலமாக சளிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா) நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் தெரிவித்தார்.
இன்ப்ளூயன்சா கோவிட்-19 போல தீவிரமானதல்ல என்றாலும், அதன் பரவலை தடுக்க விழிப்புடன் இருக்குவது அவசியம் எனவும், குறிப்பாக பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உடல்நலத்தை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
“குழந்தைகள் சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் காட்டினால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது,” என அவர் கூறினார்.
அவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றினார்.
சிலாங்கூர் தற்போது நாட்டில் மிக மோசமான காய்ச்சல் பரவலைச் சந்தித்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து கோலாலம்பூர், புத்ராஜெயா, பினாங்கு, ஜோகூர், கெடா ஆகிய மாநிலங்களிலும் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகள், நோய் பரவலைத் தடுப்பதற்காக மக்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்:
இருமும்போது அல்லது தும்மும்போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல்,
உடல்நலம் சரியில்லாதபோது கூட்டமான இடங்களைத் தவிர்த்தல்,
கிருமி நாசினி திரவம் அல்லது சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவை அடங்கும்.
“பினாங்கில் ஆண்டின் இறுதியில் இன்ப்ளூயன்சா நோய்த்தொற்று அதிகரிப்பது வழக்கமானது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக அவசியம்,” என்று டேனியல் கூய் எச்சரித்தார்.
மேலும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட (chronic) நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்க சுகாதார நிலையங்களில் இலவசமாக சளிக்காய்ச்சல் தடுப்பூசி பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




















