சென்னை, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
பல போராட்டங்களுக்கு பிறகு வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே இந்த படம் ரூ.21 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில், இந்த படத்தினை பாராட்டி திரைப்பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கருப்பு படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூர்யா அண்ணாவின் தமிழில் (கருப்பு) மற்றும் தெலுங்கில் (வீரபத்ருடு) படங்களுக்குக் கிடைத்துவரும் இந்த அபரிமிதமான அன்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. இதைக் கேட்பதற்கே மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தச் செய்தி மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திரையில் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அவர் நமக்குக் காட்டிவரும் அபாரமான திறமைக்காக… இறுதியாக, திரையரங்குகள் ஆரவாரத்துடனும் சத்தத்துடனும் இருக்கும்போது, அது நம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், தயவுசெய்து விடுமுறையை நன்றாகக் கழித்துக் கொள்ளுங்கள். மேலும், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜிக்கும், என் அன்புக்குரிய திரிஷாவுக்கும் வாழ்த்துகள். ” என்று பதிவிட்டுள்ளார்.



















