ஜோகூர் அரசியல் மாநாட்டில் செய்தியாளர்கள் மீது ஆக்ரோஷமான நடந்த பாதுகாப்புப் பணியாளர்கள்- ஊடகக் கழகம் போலீஸ் புகார்!

ஜோகூர் பாரு:

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) பெர்சாடாவில் (Persada) நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான் மாநாட்டின் போது, அரசியல் கட்சியின் பாதுகாப்புப் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறி ஜோகூர் ஊடகக் கழகம் (KMJ) போலீசில் புகார் அளித்துள்ளது.

மாநாடு நிறைவடைந்ததும், ஜோகூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த பல ஊடகவியலாளர்கள் கட்சித் தலைவர்களிடமிருந்து கருத்துகளைப் (Reactions) பெற முயன்றுள்ளனர். அப்போது, முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் செல்லும் பாதுகாப்புப் பணியாளர்கள் வரம்பு மீறிச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்களைப் பின்னுக்குத் தள்ளியதுடன், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்களின் ஊடகக் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

இந்தச் சூழல் தங்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதுடன், தங்களின் பாதுகாப்பிற்கும் அச்சத்தை உண்டாக்கியதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“செய்தியாளர்களுக்கு முறையான அனுமதியும், தேவையான இடவசதியும் வழங்கப்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்திருந்த நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஊடகவியலாளர்கள் என்பவர்கள் பொதுமக்களுக்குத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியில் ஈடுபடும் முக்கியப் பங்காளிகள் ஆவர். எனவே, அவர்களுக்கு பாதுகாப்புப் படையினரும் ஏற்பாட்டாளர்களும் தொழில்முறை ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,” என்று KMJ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் மீண்டும் நிகழாமல் இருக்கவும், ஊடகப் பணியாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் இன்று ஜோகூர் பாரு சென்ட்ரல் போலீஸ் நிலையத்தில் அதிகாரப்பூர்வப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்பாட்டாளர்கள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து பக்கத்தான் ஹராப்பான் மாநாட்டுச் செயலகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், இச்சம்பவம் தொடர்பாகத் தங்களுக்குள் உள்விசாரணை (Internal Investigation) நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இது குறித்துக் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அச்செயலகம் குறிப்பிட்டது.

மேலும், எதிர்கால நிகழ்வுகளில் ஊடக நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் செயலகம் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here