அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது – தவெகவினருக்கு அமைச்சர் ஆனந்த் எச்சரிக்கை…

சென்னை,தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முறையான அரசு பொறுப்புகளில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இல்லாமல் தாம்பரம், தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு நடத்தும் ‘அம்மா’ உணவகங்களில் தன்னிச்சையாக ஆய்வு மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர், அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ, ஆய்வுகள் மேற்கொள்ளுதலோ கூடாது.

பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்பட கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குலைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது.

நம்மை மக்கள் உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள். முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது நம் கடமை. முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், நமக்கான பொறுப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தலைவர் விஜய்யின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்.

எனவே தவெக நிர்வாகிகள் அனைவரும் அரசு நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய மட்டுமே உதவ வேண்டும். எளிய பின்னணியை கொண்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள இந்த சூழலில், தொண்டர்களின் இத்தகைய ஒழுக்கமே தவெக அரசின் நீண்டகால வெற்றிக்கு அடித்தளமாக அமையும். தலைவரின் கட்டளையை ஏற்று அனைவரும் கட்டுப்பாட்டுடன் மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here