ஆயர் தாவாரில் மின்சாரக் கேபிள் திருட்டு: இரவோடு இரவாக இரு சந்தேக நபர்கள் அதிரடி கைது!

கோலாலம்பூர்:

ஆயர் தாவார், கம்போங் சுங்கை ராமாய் பகுதியில் மின்சாரக் கேபிள்களைத் திருடிய விவகாரம் தொடர்பாக இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

மஞ்சுங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹாஸ்புல்லா அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் மஞ்சோங் மாவட்டக் காவல் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த அதிரடிக் கைதை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு அளவிலான 102 கருப்பு நிறக் கேபிள்கள், எரிக்கப்பட்ட நிலையில் 9 கேபிள்கள், எரிக்கப்பட்ட கேபிள்கள் அடங்கிய 4 சாக்கு மூட்டைகள் மற்றும் கேபிள் உறைகள் கொண்ட ஒரு சாக்கு மூட்டை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அன்றைய தினம் அதிகாலை 2.42 மணியளவில் கம்போங் சுங்கை ராமாய் பகுதியில் மின்சாரக் கேபிள்கள் திருடப்பட்டதாகக் கிடைத்த அதிகாரப்பூர்வப் புகாரைத் தொடர்ந்து இந்த விரைவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டப் பிரிவு 379 (திருட்டு) மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பன் ஊடகச் சட்டப் பிரிவு 235 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிடிபட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இன்றிலிருந்து (செப்டம்பர் 11) வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here