குவாந்தான்:
ஹரிராயா ஆய்டில்அதா (Aidiladha / ஹரிராயா ஹாஜி) பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி, மே 22 முதல் ஜூன் 2 வரையிலான காலகட்டத்தில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை (KLK) மற்றும் கிழக்குக்கரை விரைவுச்சாலை 1 (LPT1) ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை (KLK): 21.8 லட்சம் வாகனங்களும் (சாதாரண நாட்களை விட 66 விழுக்காடு அதிகம்), கிழக்குக்கரை விரைவுச்சாலை 1 (LPT1): 8.43 லட்சம் வாகனங்களும் (சாதாரண நாட்களை விட 71 விழுக்காடு அதிகம்) பயணிக்கும் என்று பகாங் மாநில பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டத்தோ ரசாலி காசிம் தெரிவித்துள்ளார்.
“போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் என்பதால், பண்டிகை காலங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிக ஒழுக்கத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். சீரான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய போக்குவரத்து விதிகளை முறையாக மதிக்க வேண்டும்,” என்று கம்பாங் (Gambang) ஓய்வுப்பகுதியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டத்தோ ரசாலி கேட்டுக்கொண்டார்.
நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும், நெடுஞ்சாலை நிர்வாக நிறுவனமான ‘ஏஎஃப்ஏ பிரைம்’ (AFA Prime Bhd) வழங்கும் பயண நேர ஆலோசனைகளைப் (Travel Time Advisory) பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பண்டிகைக் கால சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மே 24 முதல் 31 வரை நாடு தழுவிய அளவில் ‘2026 ஹரிராயா ஆய்டில்அதா சிறப்புச் சோதனை நடவடிக்கை’ ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 287 அமலாக்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.





















