கட்சித் தாவல் வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்த ஸ்கூடாய் DAP சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராகிம்!

கோலாலம்பூர்:

தாம் கட்சி மாறப் போவதாகவும் அல்லது விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதாகவும் (Bought over) பரவி வரும் வதந்திகளைச் ஸ்கூடாய் (Skudai) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராகிம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சன் சூவின் Art of War தத்துவத்தை மேற்கோள் காட்டித் தனது அரசியல் பாணியை நியாயப்படுத்தியுள்ளார். “சண்டையிடாமல் பெறப்படும் வெற்றியே மிகச்சிறந்த வெற்றி” என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதும் மோதல் போக்கை விட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே தான் கவனம் செலுத்துவதாக” அவர் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிப்பில் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில ஜசெக (DAP) தலைவர் தியோ நி சிங் (Teo Nie Ching) வெளியிட்ட தகவல்களுக்குப் பிறகுதான் இந்த சர்ச்சை வெடித்தது. வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான கட்சியின் வியூகத்தின் ஒரு பகுதியாக, மரினாவை தற்போதைய ஸ்கூடாய் தொகுதியில் இருந்து ‘திராம்’ (Tiram) தொகுதிக்கு மாற்றக் கட்சித் தலைமை ஆலோசித்தது.

எனவே மரினாவை அவரது பாரம்பரியத் தொகுதியிலிருந்து புதிய தளத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டது என்றும், தேர்தலில் ஒருவேளை தோல்வியடைந்தால், அவருக்கு அரசு சாரா வாரியம் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் (GLC / Statutory Body) தலைவர் பதவி வழங்க தியோ நி சிங் முன்மொழிந்தார்.

இந்த விவாதங்கள் தமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாவும் மரினா நேற்று திடீரென அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் கடிதம் குறித்துப் பேசிய மரினா, தான் ஜோகூர் ஜசெக-வின் வாட்ஸ்அப் குழுவில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்ததை ஒப்புக்கொண்டார், ஆனால் அது தற்போது இணையத்தில் உலா வரும் அதே ஆவணம் தானா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.”அரசியல் என்பது தொகுதி மக்களுக்கு எவ்வளவு உதவினோம் என்பதில் தான் இருக்கிறதே தவிர, வீண் விவாதங்களில் இல்லை. மக்களைக் காக்கத் தேர்தல் காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை. தற்போதைய சூழல் எனக்கு மிகுந்த தலைவலியைத் தந்துள்ளது. இப்போதைக்கு நான் சற்று ஓய்வெடுத்து, நாளை காலையில் எழுந்து மீண்டும் மக்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் பேச்சுவார்த்தையின் போது அரசு சார்ந்த நிறுவனங்களின் (GLC) உயர் பதவிகள் சலுகையாக வழங்கப்படலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதால், இந்த விவகாரம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here