பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதுக் கட்சி தொடங்க வாய்ப்பு

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், “நீங்கள் தனிக்கட்சி தொடங்குகிறீர்களா?” என கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்காமல், “இப்போது பேசினால் சரியாக இருக்காது.. எல்லாக் கேள்விகளுக்கும் 2 நாட்களில் பதில் சொல்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். மேலும் அவர் வந்த வாகனத்தில் பாஜகவின் கொடி தவிர்க்கப்பட்டிருந்ததும் தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது பதவியைக் காலி செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றார். 2025 இல் அவர் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதன்பின் அவருக்குப் கட்சியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்தன.

பாஜகவில் இருந்து ஒதுக்கப்பட்டாலும், அண்ணாமலை தனது பக்குவமான பேச்சுக்கள் மற்றும் களப்பணிகள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை வைத்துள்ளார். ஊழலுக்கு எதிரான அவரது முந்தைய பிரச்சாரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

 

குடும்ப அரசியலும் அல்லாத, சினிமா கவர்ச்சியும் இல்லாத, பண பலமும் அற்ற பின்னணியை கொண்ட அண்ணாமலை ஒரு புதிய கட்சியை தொடங்கினால், அது தவெகவின் வாக்கு வங்கியையும், குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளையும் பிரிக்க வாய்ப்புள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை புதிய கட்சி தொடங்க வரவேற்று பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகளையும் பேனர்களையும் வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here