அம்பாங்:
பத்து கேவ்ஸ் (Batu Caves) வட்டாரத்தில் உள்ள உரிமம் இல்லாத சிறார் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த ஐந்து சிறுவர்களைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 25 வயது காப்பகப் பராமரிப்பாளர் ஒருவருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகளும் விதித்து அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ரெட்ன வேலு (வயது 25) என்ற அந்த இல்லப் பராமரிப்பாளர் மீது, காப்பகத்தில் தங்கியிருந்த 8, 10, 11, 12 மற்றும் 13 வயதுடைய ஐந்து சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மொத்தம் 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட்ட ரெட்ன வேலு, தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஒன்பது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளையும் நிபந்தனையின்றி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு இந்த அதிரடி தண்டனையை விதித்து உத்தரவிட்டது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு (2026) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இக்கொடூரச் சம்பவங்கள் காப்பகத்திற்குள்ளேயே அரங்கேறியுள்ளதாக நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
“பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பு தேடி இக்காப்பகத்திற்கு வந்தவர்கள். அவர்களின் கண்ணியம் மற்றும் மனநலனை மிகக் கொடூரமாகப் பாதிக்கும் வகையில் இக்குற்றவாளியின் மிருகத்தனமான செயல் அமைந்துள்ளது. சமுதாயத்தில் இது போன்ற குற்றங்கள் இனி நடக்காமல் இருக்க இவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இத்தீர்ப்பு ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.





















