ஆற்றங்கரையில் கிடந்த காலணிகள்: கெடா மாநில முன்னாள் துணைச் சபாநாயகர் டத்தோ முகமட் ஜாமில் ஆற்றில் மூழ்கிப் பரிதாப பலி!

கோலாலம்பூர்:

கெடா மாநிலச் சட்டமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகரும், அம்னோ (UMNO) கட்சியின் மூத்த தலைவருமான டத்தோ முகமட் ஜாமில் முகமட் இத்ரோஸ் (வயது 78), இன்று காலை தண்டோப்பில் உள்ள சுங்கை தெலுக் பாகன் (Sungai Teluk Bagan) ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட அவரது காலணிகள் மூலமே அவர் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 1995-1999 மற்றும் 2004-2008 ஆகிய காலகட்டங்களில் பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor) தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் 2018 முதல் 2023 வரை மாநிலத் துணைச் சபாநாயகராகவும் முத்திரை பதித்தவர் டத்தோ முகமட் ஜாமில் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தா ஸ்டார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் (ACP) சையத் பஸ்ரி சையத் அலி இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், டத்தோ முகமட் ஜாமில் ஆற்றில் விழுந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினரிடமிருந்து இன்று அதிகாலை காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் குடும்பத்தினரால் கடைசியாகப் பார்க்கப்பட்ட டத்தோ முகமட் ஜாமில், இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டில் இல்லாததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள ஆற்றங்கரையில் அவரது காலணிகள் மட்டும் தனியாகக் கிடந்துள்ளன.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 8.10 மணியளவில், அவர் ஆற்றில் விழுந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அவரது உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின்படி, டத்தோ முகமட் ஜாமில் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு எவ்வித மனநலப் பாதிப்போ அல்லது மன அழுத்த வரலாறோ இல்லை என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது அன்றாட வழக்கப்படி, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தனது வெள்ளை நிற ‘பெரோடுவா கன்சில்’ (Perodua Kancil) காரை எடுத்து, ஆற்றங்கரையோரம் உள்ள பகுதியில் நிறுத்துவது வழக்கம். இன்றும் அந்தக் கார் ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. காரை நிறுத்தச் சென்றபோது அவர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜாலான் தண்டோப், தாமான் பாகன் இண்டாவில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த இவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இச்சம்பவத்தை ‘திடீர் மரணம்’ (Sudden Death) எனப் வகைப்படுத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here