சிரம்பானில் கொடூரம்: பள்ளி விடுமுறை முழுவதும் இருட்டு அறையில் பூட்டி வைக்கப்பட்ட 9 வயது வளர்ப்பு மகள்!

சிரம்பான்:

பள்ளி விடுமுறை காலம் முழுவதும் தனது வளர்ப்புத் தாயால் வீட்டின் பின்புறமிருந்த ஒரு இருண்ட சேமிப்பு கிடங்கு அறையில் (Storeroom) பூட்டி வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவரைப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.

சிரம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் (ACP) முகமட் யாதிம் ஒஸ்மான் இக்கொடூரச் சம்பவம் குறித்துக் கூறுகையில், நேற்று இரவு 7.22 மணியளவில் சிறுமி ஒருவர் வதைக்கப்படுவது குறித்துக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

கிடைத்த புகாரின் அடிப்படையில், சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபாரில் உள்ள ஒரு வீட்டிற்கு விரைந்த போலீசார், அங்கு வீட்டின் பின்புறம் உள்ள ஒரு கிடங்கு அறையிலிருந்து அச்சத்தில் உறைந்திருந்த அந்தச் சிறுமியை மீட்டதோடு, அவளது 46 வயது வளர்ப்புத் தாயையும் உடனடியாகக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, அந்தச் சிறுமிக்கு ஒரு வயது 8 மாதமாக இருந்தபோதே இந்த விபரீதக் குடும்பம் அவளைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது, அந்தச் சிறுமி வீட்டின் பின்புறமுள்ள அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவளுக்கு ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக மட்டுமே வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு உடனடியாக அவர் மீண்டும் அந்த இருட்டு அறைக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் உண்மைகளும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரவு நேரங்களில் பசி தாங்காமல் சிறுமி சமையலறைக்குச் சென்று உணவு எடுத்துச் சாப்பிட்ட சிறிய காரணத்திற்காக, அந்த வளர்ப்புத் தாய் சிறுமியைத் தொடர்ச்சியாகக் கொடூரமாக ஏசியும், அடித்தும் வதைத்து வந்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது.

மீட்கப்பட்ட அந்தச் சிறுமி உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மற்றும் அவசரச் சிகிச்சைக்காகச் சிரம்பான், துவாங்கு ஜாபார் மருத்துவமனைக்கு (HTJ) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 46 வயது வளர்ப்புத் தாய் மீது, 2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டம் பிரிவு 31(1)(a)-இன் கீழ் (குழந்தைகளைப் பராமரிப்பில் அலட்சியம் செய்தல் மற்றும் வதைத்தல்) போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சந்தேக நபரான அந்தப் பெண்ணைச் சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேல்விசாரணைக்காகக் காவலில் (Remand) எடுக்கப் போலீசார் இன்று காலை மனுச் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here