காதலால் எழுந்த மோதல்: மாணவரை PVC பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் – மூவர் கைது

கோலாலம்பூர்:

கம்போங் செராஸ் பாரு பகுதியில் காதல் தொடர்பான தகராறின் போது மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 29 அதிகாலை 1.40 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

22 வயதான நண்பியை வீட்டில் விட்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பாதிக்கப்பட்ட இளைஞருக்கும் அவரது காதலியின் இரு சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் தீவிரமடைந்து, முதல் சந்தேகநபர் PVC பைப்பால் பாதிக்கப்பட்டவரின் காலில் தாக்கியும், முகத்தில் குத்தியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணின் மாமாவான மூன்றாவது சந்தேகநபர், மீண்டும் அந்தப் பெண்ணை சந்தித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்த உடன் விரைந்து செயல்பட்ட மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், அதே நாளில் மாலை 4.30 மணியளவில் மூவரையும் கைது செய்தனர். தாக்குதலில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் PVC பைப்பும் பறிமுதல் செய்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், முதல் மற்றும் மூன்றாவது சந்தேகநபர்களுக்கு முன் குற்றப் பதிவு இல்லை எனவும், இரண்டாவது சந்தேகநபருக்கு ஒரு முந்தைய குற்றப் பதிவு இருப்பதும் தெரியவந்துள்ளது. மூவரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325 (கடுமையான காயம் விளைவித்தல்) மற்றும் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 325ன் கீழ் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். பிரிவு 506ன் கீழும் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக் கூடியது.

பொது அமைதியைக் குலைக்கும் எந்தவித சட்டவிரோத செயல்களையும் தவிர்க்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here