பிரேக் செயலிழப்பு: சுங்கச்சாவடி கட்டடத்தின் மீது மோதிய லோரி – ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!

கோலாலம்பூர்:

கூலாய் சுங்கச்சாவடியின் (Kulai Toll Plaza) வெளியேறும் பகுதியில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மீது லோரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லோரியின் பிரேக் பழுதடைந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து கூலாய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டான் செங் லீ கூறுகையில், விரைவுச்சாலை நடமாடும் ரோந்துப் படையினர் (EMPV) மூலம் இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது என்றார்.

முதற்கட்ட விசாரணையில், 29 வயதான லோரி ஓட்டுநர் தனது வாகனத்தின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் லோரி விரைவுச்சாலையின் இடதுபுறமாக விலகி, அங்கிருந்த சுங்கச்சாவடி நிர்வாக அலுவலகக் கட்டடத்தின் மீது பலமாக மோதி நின்றுள்ளது.

இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சிக்கவில்லை என்றும், அதிர்ஷ்டவசமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் ஏசிபி டான் செங் லீ உறுதிப்படுத்தியுள்ளார்.

“விபத்து நடந்த சமயத்தில் சுங்கச்சாவடி வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த மோதலின் தாக்கம் லோரி மற்றும் அந்த அலுவலகக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

தற்போது, அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை ஓட்டியதற்காக, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-ன் கீழ் காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மேல்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here