பெசூட் வாகன விபத்தில் ஆம்புலன்ஸில் சென்ற நோயாளிக்குக் தீவிர காயம்.

பெசூட் :

திரெங்கானு, பெசூட் அருகே கம்போங் செராங் மெலிலிங்கில் (Kampung Cherang Meliling) நேற்று மாலை நிகழ்ந்த பல்லடுக்கு வாகன விபத்தில், ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

ஜாலான் ஜெர்தே – பாசிர் அகார் (Jalan Jerteh–Pasir Akar) சாலையில் மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய இந்த ஆம்புலன்ஸ், ஏற்கனவே வேறு ஒரு விபத்தில் காயமடைந்த இரு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு பாசிர் அகார் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்ததாக பெசூட் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ரொஸைமி அப் ரஹிம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தபோது, சாலையின் வலதுபுறத்தில் இருந்து திடீரென குறுக்கே வந்த எம்பிவி (MPV) ரக வாகனம் ஒன்று அதன் மீது மோதியுள்ளது.

இந்த மோதலின் தாக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், இடதுபுறச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இக்கோர விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த 16 வயது சிறுவனுக்குக் கடுமையான காயங்களும், மற்றொரு நோயாளிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக உடனடியாக பெசூட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 43(1)-இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவசர கால வாகனங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்குமாறு வாகன ஓட்டிகளுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here