டோக்கியோ:
ஜப்பானில் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்த பெண்ணின் உதடுகளை ஊசியால் தைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்த 49 வயதுப் பெண்மணி ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜப்பானின் இபராக்கி (Ibaraki) மாநிலத்தின் கோகா (Koga) வட்டாரத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 42 வயதுப் பெண்ணின் உதடுகளில் பல இடங்களில் தையல் போடப்பட்டிருந்ததால், அவரால் பேசவோ அல்லது உணவு உட்கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டது. எப்படியோ தப்பித்து அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற அந்தப் பெண், ஒரு காகிதத்தில் “எனக்கு உதவி வேண்டும்” என்று எழுதிக் காட்டியுள்ளார்.
அப்பெண்ணின் கோரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் ஊழியர் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, அவருடன் தங்கியிருந்த 49 வயதுப் பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடவே தங்கியிருந்த பெண்ணை இவ்வளவு கொடூரமான முறையில் தாக்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



















