பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு

கராச்சி, அக்டோபர் 2:

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் கடந்த ஆகஸ்டு 10-ந்தேதி ஆவேசமுடன் பேசினார். அவர் பேசும்போது, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷபாஷ் கில்லை துன்புறுத்தியதற்காக நகர ஐ.ஜி., துணை ஐ.ஜி. மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகிய ஒருவரையும் விடமாட்டேன் என்றும் அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வேன் என்றும் எச்சரிக்கை விடும் வகையில் பேசினார்.

இதன் பின்னர் பொது பேரணியில் பேசும்போது, வரம்பு மீறி பேசி விட்டேன் என்றும் அதனை உணர்ந்து விட்டேன் என்றும் கூறி இம்ரான் கான் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வருங்காலத்தில் எந்தவொரு கோர்ட்டு மற்றும் நீதிநெறிமுறைகளின் கண்ணியம் புண்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என்றும் கான் உறுதி கூறினார். எனினும், பெண் நீதிபதி ஒருவருக்கு எதிராக சர்ச்சையாக பேசியதற்காக இம்ரான் கானுக்கு எதிராக இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளார்.

கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியான ஜீபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here