ஆடி செவ்வாய் – அம்மனை வழிபாடு செய்வதால் திருமண தடை, செவ்வாய் தோஷம் நீங்கும்.
ஆடி வெள்ளி – மஹாலட்சுமி அருள் கிடைக்கும். செல்வம். செளபாக்கியம் பெருகும்.
ஆடி அமாவாசை – தீராத குடும்ப பிரச்சனைகள் தீரும். முன்னோர் ஆசி கிடைக்கும்.
ஆடி பெளர்ணமி – மன அமைதி, நல்ல ஆரோக்கியம், நன்மைகள் அதிகரிக்கும்
ஆடி கிருத்திகை – முருகப் பெருமானின் அருள் கிடைத்து, வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.
ஆடி பூரம் – அம்மன் அருளால் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெருகும்.
ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் திருமணமாகாத பெண்கள் குத்துவிளக்கினை அலங்கரித்து, தீபத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, மனதார பிரார்த்தனை செய்தால் நல்ல கணவனை அடையலாம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் மங்களகரமான வாழ்க்கை அமைய கன்யா பூஜையும், தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெற ராகுகால பூஜையும், நாகதோஷங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி நிறைய நாகதோஷ பூஜையும் செய்வது சிறப்பு.
ஆடி அமாவாசை, பித்ருக்களின் ஆசியை பெற அற்புதமான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை, ஆடி அமாவாசை என போற்றப்படுகிறது. ஆடியில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். சிவ அம்சமான சூரியனும், சக்தி அம்சமான சந்திரனும் ஒன்று சேரும் நாள் என்பதால், சந்திரனின் ஆட்சி பலம் அடையும். சிறப்பான இந்த ஆடி அமாவாசையில் பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. நதியில் நீராடுவது புண்ணியம் தரும். சமுத்திர ஸ்நானம் செய்வதும் புண்ணியம் தரும். மாதந்தோறும் வரும் அமாவாசையில் முன்னோர் தர்ப்பணம் செய்து வழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் தொலைந்து நம் சந்ததியினர் சிறந்து வாழ்வார்கள்.
ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், மன்னார்குடி ஸ்ரீராமகோபால ஸ்வாமி திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் ஆகியவற்றில் ஆடிப்பூரம் விழாவானது பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நாளில் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்து உபசரித்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
ஆடி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரம் கருடாழ்வாரின் ஜன்ம நட்சத்திர நாளாகும். பெரிய திருவடி எனப்படி கருடாழ்வாரின் ஜன்ம நட்சத்திரம் என்பதால் வைணவத் தலங்களில் ஆடி சுவாதி நாளில் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். இந்த நாளில் கருட பகவானை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும், மாங்கல்ய பலம் பெருகும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில், குறிப்பாக வளர்பிறை துவாதசி வரையிலும் துளசி வழிபாடு செய்வதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த வழிபாடு செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். துளசி தேவியின் அருள் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைபிடிக்கப்படுவது கோபத்ம விரதம் எனும் அபூர்வ வழிபாடு. இந்த விரத நாளில் கோ மாதாவை வணங்குவது சிறப்பு. இந்த விரதம் கடைபிடித்து பசுக்களை பூஜிப்பதாலும், பசுக்களுக்கு உணவு அளிப்பதாலும் சுபிட்சம் உண்டாகும். வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகளால் தவிப்பவர்கள் விரைவில் நிவாரணம் பெற முடியும். தொழில், வேலை ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.




















