மிரட்டல் வழக்கில் தேடப்பட்ட சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி திடீர் சரண்: இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ விடுக்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பம்!

கோலாலம்பூர்:

முகநூலில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தேடப்பட்டு, வெளிநாட்டிற்குத் தப்பி ஓடியதாக நம்பப்பட்ட சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் (33), இன்று போர்ட் டிக்சன் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் திடிரெனச் சரணடைந்தார்.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி, இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தமீம் தஹ்ரி தனக்கு முகநூலில் மிரட்டல் விடுத்ததாகப் போலீசில் புகார் அளித்தார் என்று, நெகிரி செம்பிலான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மட் கூறினார்.

குறித்த புகாரைத் தொடர்ந்து சிலாங்கூர், காஜாங் பகுதியில் போலீசார் அவரைத் தேடினர். ஆனால், புகார் அளிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே (மார்ச் 9) அவர் புக்கிட் காயு ஈத்தாம் எல்லை வழியாகத் தாய்லாந்திற்குத் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த தமீம், அண்மையில் கிளந்தான் எல்லைப் பகுதியில் உள்ள சட்டவிரோதப் பாதை வழியாக மீண்டும் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளார். நாட்டிற்குள் வந்தவுடன், இன்று மதியம் 12.45 மணியளவில் அவர் போலீசில் சரணடைந்தார்.

மேலதிக விசாரணைக்காக அவரை நாளை சிரம்பான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் காவலில் (Remand) வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஆர்வலரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகச் சர்வதேசப் போலீஸ் அமைப்பான இன்டர்போல் (Interpol) மூலம் ‘ரெட் நோட்டீஸ்’ (Red Notice) பிறப்பிக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக உள்்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 506 (கொலை மிரட்டல்) மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடகம் சட்டம் 1998 பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here