வயநாடு நிலச்சரிவு.. விஐடி பல்கலைக்கழகம் ரூ.1 கோடி நிவாரண நிதி உதவி

திருவனந்தபுரம்: கேரள வயநாடு நிலச்சரிவில் 300க்கும் அதிகமான உயிர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் தற்போதுவரை 300க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று முன்தினம் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது.

ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 316 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இப்படி இருக்கையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும் வயநாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். தற்போது விஜடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலசரி ஏற்பட்டுள்ளது, இந்த நிலச்சரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மக்கள் விரைவில் மீண்டுவர வி ஐ டி பல்கலைக்கழகம் சார்பில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை தலைமை செயலகத்தில் சந்தித்து வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் ரூபாய்.1 கோடிக்கான வரைவோலை ( DD ) வழங்கினார். உடன் வி ஐ டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here