நெடுஞ்சாலை மீது கட்டுமானத்தளம் விழுந்ததில் ஒருவர் பலி – பேங்காக்கில் சம்பவம்

பேங்காக்:

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையின்மீது பெரிய இரும்புக் கட்டுமானத் தளம் விழுந்ததில் குறைந்தது ஒருவர் மாண்டார்.

இணையத்தில் அது குறித்த காணொளிகள் வேகமாகப் பரவி வருகின்றன.

பேங்காக்கின் கிழக்குப் பகுதியில் அந்தச் சாலையில் ‘லாட் கிராபாங் டோல்வே’ கட்டுமானம் நடைபெற்று வருகிறது. கட்டுமானத் தளம் திடீரென்று திங்கட்கிழமை மதியம் இடிந்து விழுந்தது என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேங்காக்கின் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, உயர்த்தப்பட்ட நெடுங்சாலைகளைக் கட்டுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி அது.

நாட்டின் பேரிடர் தடுப்பு, மீட்புத் துறை பகிர்ந்த காணொளி ஒன்றில், நெடுஞ்சாலையில் நிறைவுபெறாத சில பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய இரும்புத் தளம் ஆட்டங்கண்டு தரையில் விழுந்ததைக் காணமுடிந்தது.

குறைந்தது ஒருவர் மாண்டதாகவும், எட்டு பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுண்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

காணாமல்போனவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். காயமடைந்தோரில் நால்வர் மோசமான நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தேடல் பணிகள் கவனமாகத் தொடங்கப்படும் என்றும் திரு சட்சார்ட் கூறினார்.

தாய்லாந்தில் விபத்துகள் பொதுவாக நேர்வதுண்டு. 2016ஆம் ஆண்டில் நடந்த கட்டுமானப் பணிகளில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 13 பேர் மாண்டனர்.

தாய்லாந்து கட்டுமானத் தளங்களின் தொடர்பில் பாதுகாப்புத் தரங்கள் குறித்தும் குறைவான சம்பளங்கள் பற்றியும் தொழிலாளர் குழுக்கள் நீண்டகாலமாகவே எச்சரித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here