(ரா.தங்கமணி, ராமேஸ்வரி ராஜா, க.கலை)
சிரம்பான்,
இனவாதத்தை முன்னிறுத்தியே பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இனவாத கொள்கையை பல இன மக்களிடையே பிளவுப்படுத்தும் கூறுகளுக்கு அடித்தளமிடும் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியது.
வெறும் மலாய்க்காரர் வாக்காளர்களை மட்டும் குறிவைத்தே இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.
ஆனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எவ்வித இன பாகுபாட்டையும் பார்ப்பதில்லை. மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர் என யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்சில், அமானா கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் காலிட் அப்துல் சமாட், நெகிரி செம்பிலான மாநில ஜசெக செயலாளர் சா கின் ஆகியோர் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினர்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் ரகசிய கூட்டணி அமைத்து வெற்றி கண்டன.
ஆனால் நெகிரி செம்பிலானில் இவ்விரு கூட்டணியும் வெளிப்படையாக ஒத்துழைப்பது பக்காத்தான் ஹராப்பானுக்கே சாதகமாக அமையும்.
மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையில் மாநிலம் பொருளாதார ரீதியாக வலுபெற்றுள்ளதோடு மாநில மக்களின் மேம்பாடும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.





















