ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: 14-வது மாடித் திட்டில் சிக்கிய 78 வயது முதியவர்! காப்பாற்றச் சென்ற பக்கத்து வீட்டுக்காரரும் மாட்டிக்கொண்ட சோகம்!

கோலாலம்பூர்:

பினாங்கு, ஜெலுத்தோங், ஜாலான் லெங்கோங் சிம்போனி பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14-வது மாடி வெளிப்புற குறுகிய திட்டில் (Ledge) சிக்கித் தவித்த 78 வயது முதியவர் உட்பட இரு ஆடவர்களைத் தீயணைப்புப் படையினர் காயங்களின்றி பத்திரமாக மீட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 1.28 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்தது. உடனடியாக ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் கூறினார்.

தனது வீட்டின் அறைக்கதவு பூட்டிக்கொண்டதாகக் கருதிய 78 வயது முதியவர், அறையின் பின்பக்க ஜன்னல் வழியாக வெளியேறி, வீட்டின் பூட்டை வெளிப்புறமாகத் திறக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவரால் தொடர்ந்து நகர முடியாமல் 14-வது மாடியின் வெளிப்புறச் சுவரில் சிக்கிக்கொண்டார்.

இதைப் பார்த்த 50 வயதுடைய பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு உதவச் சென்றுள்ளார். ஆனால், இருவருமே சோர்வடைந்து 14-வது மாடித் திட்டில் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே தவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் முதன்மை கதவு வழியாக உள்ளே நுழைந்து, 14-வது மாடிச் சுவரில் தவித்துக் கொண்டிருந்த இருவரையும் பிற்பகல் 1.52 மணியளவில் எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here