கோலாலம்பூர்:
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பெர்சத்து (Bersatu) கட்சிகளிடையே எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தைகளும் இதுவரை நடைபெறவில்லை என்று பக்காத்தான் தொடர்பு இயக்குநர் டத்தோஸ்ரீ பாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 29) புத்ராஜெயாவில் நடைபெற்ற அஞ்சல் வழி மருத்துவ நிதியுதவி தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
“இதுவரை பக்காத்தான் – பெர்சத்து கூட்டணி தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பான எந்தவொரு இறுதி முடிவையும் பக்காத்தான் ஹராப்பானின் அதிபர் மன்றமே (Presidential Council) முடிவு செய்யும்” என்று டத்தோஸ்ரீ பாஹ்மி பாட்சில் கூறினார்.
முன்னதாக, பக்காத்தான் மற்றும் பெர்சத்து தலைவர்கள் திங்கள்கிழமை (செப்டம்பர் 28) இரவு மலாக்காவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரவு விருந்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் கூட்டணி உருவாகலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.
ஆனால், இந்தச் சந்திப்பு மலாக்கா தேர்தல் குறித்துத் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு முறசாரா நிகழ்வு மட்டுமே என பெர்சாத்து மலாக்கா தகவல் பிரிவுத் தலைவர் ஹிஷாமுடின் அப்துல் கரீம் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி மலாக்கா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணி (BN) அல்லாத ‘PH Plus’ கூட்டணி அமைப்பது குறித்து பக்காத்தான் பரிசீலித்து வருவதாகக் கூறப்படும் வேளையில், தேர்தலுக்கான முக்கியத் தேதிகளை முடிவு செய்ய மலேசியத் தேர்தல் ஆணையம் (EC) வரும் அக்டோபர் 7-ஆம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















