(ரெ. மாலினி)
மலாக்கா:
நாட்டில் ஊழலற்ற, பொறுப்பான மற்றும் வலுவான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்கள் தங்களது வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்தி ஆதரவளிக்க வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மாச்சாப், கம்போங் பெர்மாயில் நடைபெற்ற மடானி தீபாவளி விருந்தோம்பல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மலேசியாவில் வாழும் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வும் சகோதரத்துவ உணர்வும் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார்.

அனைத்து இன மக்களும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதுடன், ஒருவருக்கொருவர் உரிய மரியாதை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் நிலவுவதாகக் கூறப்படுவதை மறுத்த பிரதமர், நாட்டின் உண்மையான பிரச்சினை அரசாங்கக் கட்டமைப்பில் காணப்படும் ஊழலே எனச் சுட்டிக்காட்டினார்.

1MDB விவகாரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், சிறிய அளவிலான திருட்டாக இருந்தாலும் சரி, பெரிய அளவிலான கொள்ளையாக இருந்தாலும் சரி, தவறு என்பது தவறுதான் எனத் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் திருட்டையோ ஊழலையோ நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, ஊழலற்ற மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்கள் தேர்தலின்போது தங்களது வாக்குரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில், அசஹான் தொகுதியில் போட்டியிடும் டேனிஷ், மாச்சாப் ஜெயா தொகுதியில் போட்டியிடும் ஜினி லிம் மற்றும் ரும்பியா தொகுதியில் போட்டியிடும் முகமட் குஜைரி ஆகிய ஹராப்பான் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.





















