(ரெ. மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநிலத்தில் கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பாரிசான் நேஷனல் (BN), மக்களின் அடிப்படைத் தேவைகளையும் நீண்டகாலப் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் எந்த அளவுக்குச் செயல்பட்டுள்ளது என்ற கேள்வியை பக்காத்தான் ஹராப்பான் (PH) முன்வைத்துள்ளது.
கடந்த மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளைக் கைப்பற்றிய பாரிசான் நேஷனல், மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தபோதிலும், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நிர்வாகச் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் மலாக்கா மாநிலத் தலைவர் அட்லி ஸஹாரி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை வெற்றி என்பது வெறும் அரசியல் பலமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. மாறாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அந்த அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வீட்டு வசதிப் பிரச்சினையால் தவிக்கும் மக்கள்
மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், வீட்டு வசதிப் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பதாக அட்லி ஸஹாரி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் சொந்த வீடு வாங்குவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
வீட்டு விலைகளுக்கும் குடும்ப வருமானத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதுடன், நிதிச் சுமையும் உயர்ந்து வருவதால், இளம் தலைமுறையினர் சொந்த வீடு வாங்குவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமூக நல உதவிகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள், போதுமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் கிடைக்காத நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களையும் மாநில அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அட்லி ஸஹாரி வலியுறுத்தினார்.
சிறு வியாபாரிகளுக்கும் சவால்கள்
மலாக்காவில் உள்ள சிறு வியாபாரிகள் கடை வாடகை உயர்வு, தொழில் நடத்துவதற்கான மூலதனப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறு வணிகங்கள் உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விளங்குவதால், அவற்றின் வளர்ச்சியை உறுதிசெய்ய நிதியுதவி, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் பொருத்தமான ஆதரவுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, நிரந்தரத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மலாக்கா சென்ட்ரல், சுற்றுலாத்துறைக்குக் கூடுதல் கவனம் தேவை
இதனிடையே, மலாக்கா சென்ட்ரல் தொடர்பான பிரச்சினைகள், முழுமையாகப் பயன்படுத்தப்படாத மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சில சுற்றுலாத் தலங்களின் தற்போதைய நிலை குறித்தும் அட்லி ஸஹாரி கேள்வி எழுப்பினார்.
சுற்றுலாத்துறை முக்கியப் பொருளாதாரப் பங்களிப்பை வழங்கும் மலாக்கா மாநிலத்தில், சுற்றுலாத் தலங்களின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




















