ஆகஸ்டு 1க்குப் பின் புதிய ஆட்டம்

அவசரகாலச் சட்டம் அமலில் இருக்கும் வரையில்……

நாடாளுமன்றத்தைக் கூட்டச் சொல்லும் அதிகாரம் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு இருக்கிறதா? பிரதமரின் ஆலோசனைப்படிதான் அவர் அதனைச் செய்ய முடியுமா?

கடந்த சில காலமாகவே இதுதான் சூடான வாதமாக இருக்கிறது. சட்டமேதைகள் முதல் சாமானியன் வரை இதுதான் இன்றைய பேச்சாக இருக்கிறது.

பிரதமர் இவ்விவகாரத்தில் மாமன்னருக்கு ஆலோசனை வழங்க முடியுமா? கண்டிப்பாக முடியும். ஆனால், அதற்கு அவர் தகுதிபெற்றிருக்க வேண்டுமெனில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டப் பேராசிரியர் ஷாட் சலீம் ஃபாருகி இதனை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டுமே பிரதமரின் ஆலோசனையை மாமன்னர் ஏற்பார் – செயல்படுவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழக்கும்பட்சத்தில் பிரதமர், நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி மாமன்னரைக் கேட்டுக் கொள்ளலாம். அல்லது அவரின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இதனைக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் விதி 43(4) மிகத் தெரிவாக வரையறுக்கிறது என்று நாட்டின் முன்னணி சட்ட வல்லுநரான ஷாட் சலீம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பெரும்பாலும் ஒரு பிரதமரின் ஆலோசனைப்படிதான் பேரரசர் செயல்படுவார். இந்நிலையில் பிரதமரின்  செல்வாக்கு பரிசோதனைக்குள்ளாவது இயற்கையின் நியதி.

பிரதமர் பொறுப்பில் உள்ள ஒருவர் நாடாளுமன்ற மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளாரா? அந்தத் தகுதியில் அவர் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக மாறும்போது ஆதரவு என்பதற்கான அர்த்தமும் மாறுபடுகிறது.

மாட்சிமை தங்கிய பேரரசருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரத்தில் இருக்கும் பிரதமர், மக்களவையில் வலுவான, சட்டப்பூர்வமான ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமும் கட்டாயமும் ஆகும். இதனை அரசியலமைப்புச் சட்டம் விதி 43 (4) தெளிவாகவே சொல்கிறது.

அதே சமயத்தில் அவசரகாலச் சட்டம் பிரிவு (1)(பி) என்பதானது, சரியான – முறையான நாள் என்று கருதப்படும் ஒரு நாளில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது, இடைநீக்கம் செய்வது, கலைப்பது பற்றி மன்னர் முடிவு செய்யலாம் என்று கூறுகிறது.

இதன் அடிப்படையில் பெரும்பாலோர் அது பிரதமரின் முடிவு அல்ல. மாறாக மாமன்னரின் முடிவு என்று கருதுகின்றனர். ஆனாலும் அவசரகால அதிகாரம் என்பது ஆலோசனைக்கு உட்பட்டது என்பதுதான் சரியானதாக இருக்கும் என்கிறார் ஷாட் சலீம்.

பெரும்பாலோர் அவசரகாலச் சட்டத்திற்கு நேரடி அர்த்தம் கொள்வதால்தான் குழப்பங்களுக்கும் வாதங்களுக்கும் காரணமாகிவிடுகின்றன.

மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை இழக்கும் பிரதமரை பதவி விலகச் சொல்லி பேரரசர் கேட்டுக்கொள்ளலாம் அல்லது நீக்கலாம்.

ஆனால், அவசரகாலச் சட்டம் அமலில் இருக்கும்பட்சத்தில் அமைச்சரவையின் பதவிக் காலம் நீடிக்கும்.

அவசரகாலச் சட்டம் அமலில் இருக்கும் வரை பிரதமர் அமைச்சரவையின் நடப்பு பதவிக்காலம் தொடரும் என்று அச்சட்டத்தின் பிரிவு 11 தெளிவுபடுத்துகிறது.

நடப்பு அவசரகாலச் சட்டம் அமலில் இருக்கும் வரை பிரதமரும் அமைச்சரவையும் பதவியில் நீடிப்பர். ஆகஸ்டு 1ஆம் தேதி இந்த அவசரகாலப் பிரகடனம் முற்றுப்பெறுகிறது.

அதற்குப் பின்னர் முற்றிலும் ஒரு புதிய ஆட்டம் தொடங்கும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here