ஆசிரியரை கோடரியால் தாக்கியதாக 16 வயது மாணவர் மீது குற்றச்சாட்டு! மனநலப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

கூச்சிங், 

சரவாக் மாநிலம் கூச்சிங்கில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியரை கோடரியால் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 16 வயது மாணவர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர், இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக சரவாக் காவல்துறை ஆணையர் சைஃபுல்லிசான் இஷாக் தெரிவித்தார்.

ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தது, ஆபத்தான ஆயுதத்தின் மூலம் ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியது மற்றும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வெடிபொருட்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் 1958ஆம் ஆண்டு அரிக்கும் பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் 7ஆவது பிரிவு, குற்றவியல் சட்டத்தின் 324ஆவது பிரிவு மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் 8ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாணவர் தனது பெற்றோருடன் நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன், அவருக்காக வழக்கறிஞரும் ஆஜரானார். எனினும், இன்றைய விசாரணையின்போது அவரிடமிருந்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இதனிடையே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 342ஆவது பிரிவின் கீழ், மாணவரை கூச்சிங்கில் உள்ள செந்தோசா மருத்துவமனையில் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

முன்னதாக, கடந்த அக்டோபர் 21ஆம் தேதி மாணவரிடமிருந்த கூர்மையான ஆயுதத்தைப் பறிமுதல் செய்ய முயன்றபோது ஆசிரியர் ஒருவர் காயமடைந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மாணவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் பட்டாசுகளும் இருந்தது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களைப் பரப்பாமல் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என சரவாக் காவல்துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here