நான் பதவி விலகவில்லை! ராஜினாமா கடிதத்தை அனுப்பவும் அனுமதிக்கவில்லை – நெ.செம்பிலான் மந்திரி பெசார் விளக்கம்!

சிரம்பான், 

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து தாம் விலகவில்லை என்றும், தமது ராஜினாமா கடிதத்தை மாநில ஆட்சியாளரிடம் சமர்ப்பிப்பதற்குத் தாம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்றும் டத்தோ இஸ்மாயில் லாசிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமது ராஜினாமா கடிதம் கட்சித் தலைமையிடம் இருந்தது உண்மைதான். ஆனால், அந்தக் கடிதத்தை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரிடம் சமர்ப்பிப்பதற்குத் தாம் ஒப்புதல் வழங்கவில்லை என்று அவர் விளக்கினார்.

இன்று சிரம்பானில் உள்ள மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“நான் நேரடியாக ராஜினாமா கடிதத்தை மாநில ஆட்சியாளரிடம் சமர்ப்பிக்கவில்லை. அந்தக் கடிதத்தை அவ்வாறு சமர்ப்பிப்பதற்கும் நான் சம்மதிக்கவில்லை.

“சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இந்த விவகாரத்தை அறிந்துகொண்டேன். அந்தக் கடிதத்தை யார் அனுப்பினார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது.

“கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட விதத்தை மாநில ஆட்சியாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்று இஸ்மாயில் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று இஸ்தானா ஹிங்காப்பில் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸை இஸ்மாயில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக மந்திரி பெசாராகத் தொடர்ந்து பணியாற்றுமாறு மாநில ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு, தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸாம்ப்ரி அப்துல் காதிர், இஸ்மாயில் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அரசியல் சர்ச்சை உருவானது.

தேசிய முன்னணித் தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடிக்கு, மாநில ஆட்சியாளருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ராஜினாமா கடிதத்தின் நகல் கிடைத்துள்ளதாகவும் ஸாம்ப்ரி தெரிவித்திருந்தார்.

எனினும், மாநில அரசியலமைப்பின்படி மந்திரி பெசாரின் ராஜினாமா, மாநில ஆட்சியாளரின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று நெகிரி செம்பிலான் அரண்மனை கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது.

இதனிடையே, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்லாததால் அரசாங்க நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார்.

ஆட்சிக்குழுக் கூட்டங்களை நடத்த முடியாததால் பல முக்கிய அரசாங்க முடிவுகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கு மாநில ஆட்சியாளரின் ஒப்புதலைப் பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், அதனை விரைவில் இறுதி செய்யவுள்ளதாகவும் இஸ்மாயில் கூறினார்.

ஆட்சிக்குழு நியமனங்கள் நிறைவடைந்த பின்னரே மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் மற்றும் மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கான தேதிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகள், அரசாங்க நிர்வாகத்தைப் பாதிக்காத வகையில் உரிய நடைமுறைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here