சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என மாநில அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் அரசியல் நிலவரம் மற்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,மந்திரி பெசார் பதவியில் தொடர டத்தோ இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும். அத்துடன், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் பரிசீலனைக்காகப் புதிய மாநில ஆட்சிக்குழு (EXCO) உறுப்பினர்களின் பட்டியலையும் அவர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாம் எவ்விதப் பதவி விலகல் கடிதத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனை அரண்மனைக்கு அனுப்ப ஒப்புதல் வழங்கவில்லை என்றும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளதாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி அவர் பதவி விலகியதாக பாரிசான் நேஷனல் (BN) அறிவித்திருந்த போதிலும், அக்கடிதத்தின் உண்மைத்தன்மையை அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்மாயில் லாசிம் பதவியில் நீடிக்க வேண்டும் என மாநில ஆட்சியாளர் விரும்புவதாகப் பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரண்மனை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ற்போதைய சூழலில், மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்மாயில் லாசிம் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு மாநில ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள இச்சூழல் குறித்து அரண்மனையின் இவ்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.























