கமலா ஹாரிஸ் வெற்றியை ஆரவாரமாக கொண்டாடிய சொந்த ஊர்

அமெரிக்கா தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்(வயது 55) அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இவரது சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களாவர் .

இந்நிலையில் அமெரிக்க நாட்டு துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட்டதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் சந்தோசம் அடைந்தனர்.

இதில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகைகள் நிறுவி ஆதரவு கொடுத்துள்ளனர் . இதனிடையே கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுவிட்டார் என்ற தகவல் அறிந்ததும், துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர் . தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை ஆரவாரமாக கொண்டாடியுள்ளனர் .