வயநாடு: மக்களின் துயரத்தை தீர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்களிக்க வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம் இருப்பதாக ராகுல்காந்தி உறுதியளித்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது உண்மை தான்; ஆனாலும் எதிர்காலத்தை பற்றி வயநாடு மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உறுதுணையாக இருப்பர் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது. பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வயநாடு மாவட்டம் மேப்பாடி புத்துமலையில் நிலச்சரிவில் சிக்கிய 18 பேரில் இதுவரை 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில்அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாலும், அந்த பகுதி முழுவதும் சகதி நிறைந்து காணப்படுவதாலும் மீட்பு படையினரும் பொதுமக்களும் உயிரை பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வயநாட்டு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 2-வது நாளாக ராகுல்காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம் இருப்பதாக உறுதியளித்தார். அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மக்களிடையே உறுதியளித்தார்.