பெங்களூரு: வெள்ளம் பாதித்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரயிலில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பால் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பினால் அதற்கான போக்குவரத்து கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரிய வணிக போக்குவரத்து துணை இயக்குனர் மகேந்திர சிங், அனைத்து ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வெள்ளம் பாதித்த கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு நிவாரணப் பொருட்களை சரக்கு ரயிலில் அனுப்ப போக்குவரத்து கட்டணம் வசூலிக்ககூடாது.
இதேபோல் அனைத்து அரசு அமைப்புகள் மூலம் சரக்கு பெட்டிகளில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கான பார்சல் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்புவோர் அல்லது பெறும் நபர் மாவட்ட ஆட்சியர் அல்லது துணைக் கமிஷனராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.