கோலாலம்பூர்:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) புக்கிட் தாகார் (Bukit Tagar) சுங்கச் சாவடி வெளியேறும் வளைவு அருகே, குப்பை சேகரிக்கும் லோரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4:32 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அவசர அழைப்பைத் தொடர்ந்து, புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
‘இசுஸு’ (Isuzu) ரகக் குப்பை லோரி கட்டுப்பாட்டை இழந்து சறுக்கித் தலைகீழாகக் கவிழ்ந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. லோரியில் ஒரு மலேசியர் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் என மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தின் போது இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்டுப் பரிசோதித்த சுகாதார அமைச்சைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
காயமடைந்த மற்ற மூன்று நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.




















