சம்மன் எழுதிய அதிகாரியைத் தாக்கி மிரட்டல்: ஈப்போவில் 42 வயது நபர் கைது!

கோலாலம்பூர்:

ப்போ மாநகராட்சி மன்றச் (MBI) செயலாக்க அதிகாரி ஒருவரைத் தாக்கி, மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 42 வயதுடைய நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை, ஈப்போ ‘ஜாலான் பங்காலான் பாராட் 35’ (Jalan Pengkalan Barat 35) பகுதியில் அதிகாரி சம்மன் (Compound) எழுதிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று, ஈப்போ மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் முகமது நஜீப் அம்சா கூறினார்.

42 வயதுடைய அந்தச் சந்தேக நபர், மாநகராட்சி அதிகாரியைத் தனது வாகனத்தால் மோத முயன்றதுடன், அவரைத் தொடர்ச்சியாகப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அதிகாரி அருகே சென்றதும் அவரது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அந்த அதிகாரிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வப் புகார் அளித்தார், கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ஈப்போ மாவட்டக் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று பிற்பகல் 12:40 மணியளவில் சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

விசாரணையை நிறைவு செய்வதற்காகச் சந்தேக நபரைத் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப் போலீசார் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரவுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் பிரிவு 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்/தாக்குதல்), குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது:

அரசு ஊழியர்கள் தங்களது கடமையைச் செய்யும்போது அவர்களைத் தடுப்பவர்கள், தாக்குபவர்கள் அல்லது மிரட்டுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here