48 மணி நேரத்தில் அமைச்சர் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும் – ஸாக்கிர் நாய்க்

கோலாலம்பூர், ஆக. தம்மை பற்றி மனித வள அமைச்சர் குலசேகரன் கடந்த ஆகஸ்ட் 13-ல் வெளியிட்டிருந்த பத்திரிகை அறிக்கை தொடர்பில் 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமது வழக்கறிஞர் நிறுவனம் மூலம் அந்த மன்னிப்பு கோரும் ஆகஸ்ட் 16 தேதியிடப்பட்ட கடிதத்தை குலசேகரனுக்கு அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

குலசேகரனின் “மலேசியாவில் ஸாக்கிர் நாய்க் இருப்பது மலேசியர்களுக்கு  அவமானம்” எனும் தலைப்பிலான பத்திரிகை அறிக்கை தம்மை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அந்த பத்திரிக்கை அறிக்கை பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது. “தான் நேர்மையற்றவன் என்றும், இஸ்லாம் சமயத்தை தன்னுடைய சுய லாபத்துக்காக பயன்படுத்துவதாகவும் மலேசிய இந்துக்கள் மலேசியாவுக்கு விசுவாசமாக இல்லை என்று தாம் குற்றச்சாட்டியதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் தாம் சித்தரிக்கப்பட்டதாக ஸாகிர் நாய்க் குறிப்பிட்டுள்ளார்.

என்னை சிறுமைப்படுத்தும் அந்த அறிக்கை தவறான நோக்கம் கொண்டது. வெறுப்புணர்வு அடிப்படையில் அமைந்துள்ளது. மனிதவள அமைச்சின் முத்திரை கொண்ட கடிதத்தை பயன்படுத்தி பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பதன் வழி குலசேகரன் நேரடியாக தமது பதவியை சுய நலத்துக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் தவறாக பயன்படுத்தியுள்ளார் என ஸாக்கிர் நாய்க் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குலசேகரன் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்பதோடு தமது மரியாதைக்கு ஏற்பட்ட இழுக்குக்கு ஏற்ப உரிய நஷ்டஈட்டு தொகைக்கும் இணங்க வேண்டும் என ஸாக்கிர் நாய்க் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here