இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதிப்பாரா கோஹ்லி?

ஆன்டிகுவா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ் போட்டி, நார்த் சவுண்டு சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரையும் 2-0 என்ற  கணக்கில் கைப்பற்றி அசத்தியது (முதல் போட்டி மழையால் பாதிப்பு). அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமான பின்னர் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் விளையாடும்  முதல் போட்டி இது என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.சாதனை வாய்ப்பு: இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்தவர்களில் எம்.எஸ்.டோனி 60 டெஸ்டில் 27 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை சமன் செய்ய கோஹ்லிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இதுவரை 46 டெஸ்டில் 26 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆன்டிகுவா டெஸ்டில் வெற்றியை வசப்படுத்தினால் டோனியுடன்  சமநிலையை எட்டலாம்.மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் சாதனையை (19 சதம்) சமன் செய்யவும் கோஹ்லிக்கு வாய்ப்பு உள்ளது. இந்த வரிசையில் தென்  ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் 109 டெஸ்டில் 25 சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய அணி தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹனுமா விஹாரி இன்னிங்சை தொடங்கினால் ராகுல் நடுவரிசையில் களமிறக்கப்படுவார். ரகானே, ரோகித் இருவருக்கும்  இடம் கிடைக்குமா என்பதை ஆடுகளத்தின் தன்மையே நிர்ணயிக்கும். இவர்களுடன் கோஹ்லி, புஜாரா, பன்ட், ஜடேஜா என்று பலமான பேட்டிங் வரிசை அமைந்துள்ளதால் இந்திய அணி உற்சாகமாக உள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு அஷ்வின்  அல்லது குல்தீப் பொறுப்பேற்கலாம்.

இஷாந்த், பூம்ரா, ஷமி வேகப் பந்துவீச்சு கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. வேகத்துக்கு சாதகமான பிட்ச் என்றால் கூடுதலாக புவனேஷ்வர் அல்லது உமேஷ் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.  டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக உள்ள இந்தியா, இப்போட்டியில் வென்று முழுமையாக 60 புள்ளிகளை அள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது.

அதே சமயம், சொந்த மண்ணில் டி20, ஒருநாள் தொடர்களை இழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும், ஜேசன் ஹோல்டர் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய அணி மிகுந்த நம்பிக்கையுடன் வரிந்துகட்டுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதும்  அந்த அணி வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஆன்டிகுவா டெஸ்டில் இங்கிலாந்து 187 மற்றும் 132 ரன்னுக்கு சுருண்டது குறிப்பிடத்தக்கது. ‘ராட்சத’ வீரர் ரகீம் கார்ன்வால் களமிறங்குவாரா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்கும்  முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்),  ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ்.வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டோரிச், ஷேனான் கேப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷாய் ஹோப்,  கீமோ பால், கெமர் ரோச்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here