மோடி, அமித்ஷாவின் கூட்டு பழிவாங்கும் படலம் அம்பலம்

சென்னை

சர்வாதிகார நடவடிக்கை மூலம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மோடி, அமித்ஷாவின் கூட்டு பழிவாங்கும் படலம் வெளிப்பட்டிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மத்தியில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடுமையான விமர்சனங்களை அவர் தொடர்ந்து செய்து வந்தார். இதை சகித்துக் கொள்ள முடியாத மோடி, அமித்ஷா போன்றவர்கள் தீட்டிய பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக சிபிஐயை ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏவி விட்டுள்ளனர். இதன்மூலம் அவரது குரலை ஒடுக்கிவிடலாம் என பாஜ கனவு காண்கிறது.

பத்திரிகையாளர்களை சந்தித்து தனது நிலையை விளக்கி, நேரடியாக வீட்டிற்கு சென்றார் சிதம்பரம். இவரை பின்தொடர்ந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டின் கதவு திறப்பதற்கு சில நிமிடங்கள் கூட பொறுமையாக இல்லாமல், சுவர் ஏறி குதித்து, வீட்டின் கதவை உள்பக்கமாக திறந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். ஏதோ மிகப் பெரியகுற்றவாளியை கைது செய்வதை போல ஒரு நாடகத்தை சிபிஐ நிகழ்த்தியிருக்கிறது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயக படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது.

அவரை கைது செய்திருப்பதன் மூலம் மோடி, அமித்ஷா ஆகியோரின் கூட்டு பழிவாங்கும் படலம் வெளிபட்டிருக்கிறது. பாஜவின் சிறைச்சாலைகளை கண்டு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சமாட்டார்கள். எந்த சிறையையும் சந்திக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள். பாஜவின் சர்வாதிகாரப் போக்கு நீண்டநாள் நீடிக்காது. பாஜவின் இத்தகைய சர்வாதிகார பாசிச போக்கை முறியடிக்கும் வரை காங்கிரஸ் கட்சியினருக்கு ஓய்வோ, உறக்கமோ இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here