தனிப்பட்ட வங்கிக் கடன் பெற, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நிர்பந்தித்தது, மாணவர்கள் விளக்கம்

அரா டாமான்சாரவில் இயங்கும், ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) தனியார் பயிற்சி நிறுவனத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்கள் போலீசாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர்.

சக மாணவர்கள் இருவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 90 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதாக கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆலோசகர் சரண்ராஜ் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

அவ்விருவரும் கட்டணம் செலுத்தாததே, கல்லூரியில் இருந்து விலக்கப்படக் காரணம் என பெட்டாலிங் ஜெயா துணைப் போலீஸ் தலைவர் கு மஷரிமன் கு மஹ்மூட் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் அது பொய்யான தகவல் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

“அக்கல்லூரி மாணவர்களுக்கு, நிர்வாகம் உறுதியளித்ததைப் போல் கல்விக் கடனுதவியைப் பெற்றுத்தர தவறிவிட்டது. அதனால், நீக்கம் செய்யப்பட்ட அந்த இரு மாணவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கட்டணம் செலுத்தவே இல்லை.

“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கல்லூரி நிர்வாகத்திடம் அவர்கள் கேள்வி கேட்டதன் அடிப்படையிலேயே, அவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர்,” என சிவராஜன் விளக்கப்படுத்தினார்.

“மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும், மலேசியத் திறன்கல்வி ஆணையத்தில் இக்கல்லூரி நிர்வாகம் முறையாகப் பதிவு செய்யவில்லை. அதனால்தான், அம்மாணவர்கள் கடனுதவி பெற முடியாமல் போனது, அதனால்தான் அவர்களால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் இருவரும், கல்லூரி மாணவர் இயக்கத்தின் தலைவரும் (யாகேஸ்) செயலாளரும் ( ஜோய் யீ) ஆவர்.

“மனிதவள அமைச்சின் கல்விக் கடனுதவி கிடைக்காததால், கல்லூரி நிர்வாகம் எங்களைத் தனிப்பட்ட வங்கிக் கடன் பெற நிர்பந்தித்தது. அஃப்ஃபின் வங்கிக் கடனுக்கு 8 விழுக்காடு வட்டி, எங்களால் அவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்ட முடியும்?” என மாணவர் இயக்கத் தலைவர் யாகேஸ் கேள்வி எழுப்பினார்.

மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி மறியல், கிளானா ஜெயா காவல் நிலையம்

தாங்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு கல்லூரி நிர்வாகம் பதிலளிக்கவில்லை என்றும், அதனால்தான் மாணவர் இயக்கம் அமைத்து, அனைவரும் சேர்ந்து கேள்வி எழுப்பியதாகவும் யாகேஸ் சொன்னார்.

“நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நிர்வாகத்திடம் இருந்து பதில் வரவில்லை, எங்களைச் சந்திக்கவும் அவர்கள் தயாராக இல்லை. எனவேதான், நாங்கள் அனைவரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தைச் சந்திக்கச் சென்றோம்.

“உண்மையில், கல்லூரி நிர்வாகத்தைச் சந்திப்பதற்கு முன்னதாக, நாங்கள் அரா டாமான்சாரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றோம். ஆனால், போலிசார், இணையத் தொடர்பில் ஏற்பட்ட கோளாரினால் புகாரைப் பதிய இயலாது என்று கூறிவிட்டனர்.

“அதன் பிறகு, கல்லூரி நிர்வாகம் புகாரளித்து எங்களைக் கைது செய்ய வைத்துவிட்டது,” என்றார் அவர்.

யாகேஸ் கூற்றுப்படி, கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. மற்றக் கல்லூரிகளில் RM 60,000-த்தில் முடிக்க வேண்டிய பயிற்சிக்கு இவர்கள் RM 75,000 வசூலிக்கின்றனர். அதுகூட பரவாயில்லை என ஏற்றுக்கொண்ட பின்னர், கடனுதவியைத் தனியார் வங்கியில் பெற மாணவர்களை நிர்பந்திக்கின்றனர்.

பலமுறை கல்லூரி நிர்வாகத்தைச் சந்திக்க முயன்றும், அவர்கள் தயாராக இல்லை.

மேலும், புதிய அரசாங்கம் அமைந்ததால், முந்தைய அரசாங்கத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் பல சாக்குபோக்குகள் சொல்லிக்கொண்டு இருந்ததால், தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கைதானவர்கள் அனைவரும் விடுதலை

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில், கிளான ஜெயா காவல் நிலையத்தில், அக்கல்லூரி மாணவர்களுடன் சமூக ஆர்வலர்கள் சிலரும், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

விடுதலையான மாணவர்கள், கிளானா ஜெயா காவல் நிலையத்தின் முன்

அதனை அடுத்து இரவு மணி சுமார் 9.45 அளவில், கைதான எட்டு பேரும், போலிஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அத்தனியார் கல்லூரியில் மொத்தம் 182 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் 164 பேர், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டக் கல்லூரி மாணவர் இயக்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 92 மாணவர்கள் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here