அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர், வார்டுபாய் பணிக்கு தமிழில் தேர்வு: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது அரசு கொறடா அனந்தராமன் பேசியதாவது: புதுச்சேரி முழுவதும் உள்ள ஹைமாஸ், மினிமாஸ் விளக்குகள் எரியவில்லை. போர்க்கால அடிப்படையில் இவற்றை சரி செய்ய வேண்டும். எனது தொகுதியான அரியாங்குப்பம் மணவெளியிலும் இதுபோன்ற விளக்குகள் எரியவில்லை. முக்கிய பாலங்களில் கூட இந்த விளக்குகள் எரியவில்லை. குறிப்பாக வில்லியனூர் பைபாஸ் சாலையிலும், சங்கராபரணி ஆற்றுப்பாலத்திலும் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. பொதுப்பணித் துறையில் உள்ள மின்சார பிரிவு செயல்படவில்லை.

எனவே புதுச்சேரியில் உள்ள ஹைமாஸ், மினிமாஸ் விளக்குகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் தீப்பாய்ந்தான் (காங்.): கரசூர், சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அப்போது விலை குறைவாக அந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் அந்த நிலங்களில் 120 விவசாய மோட்டார்கள் இருந்ததாக கணக்கெடுப்பில் கூறி உள்ளது. எனவே விவசாயிகள் கேட்கும் தொகையை அரசு கொடுக்க வேண்டும்.

அன்பழகன் (அதிமுக): இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், வார்டுபாய் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வார்டுபாய் பணிக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எழுத்து தேர்வை ஆங்கிலத்தில் நடத்துவதாக அறிவித்துள்ளனர். ரயில்வே தேர்வின்போது இந்தியில் தேர்வு எழுத முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் புதுச்சேரியிலேயே பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படவில்லை. இது மிகவும் வேதனையானது. முதல்வர் நாராயணசாமி: முதன் முதலாக அன்பழன் எம்எல்ஏ அரசுக்கு நல்ல ஆலோசனையை தெரிவித்து இருக்கிறார். 10ம் வகுப்பு படித்தவருக்கு ஆங்கிலத்தில் தேர்வு வைத்ததை ஏற்க முடியாது. எனவே தமிழில் தேர்வு நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here