சென்னை – மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வருமானவரித்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை வருமான வரித்துறை மனமகிழ் மன்றம் சார்பில் முதலாவது மாநில அளவிலான ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி அரங்கில் நடைபெற்றது.
செப். 12 தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் ஐசிஎப், இந்தியன் வங்கி, கலால், ஏஜிஎஸ், தமிழக காவல் துறை உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வருமானவரித்துறை – கோவில்பட்டி எஸ்டிஏடி அணிகள் மோதின. இதில் வருமான வரித்துறை அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
அந்த அணி சார்பில் முதல் நிமிடத்தில் சிவமணி, 8வது நிமிடத்தில் ஆர்.ரஞ்சித் கோல் அடித்தனர். எஸ்டிஏடி அணி சார்பில் 9 வது நிமிடத்தில் தினேஷ்குமார் ஒரு கோல் அடித்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய முன்கள ஆட்டக்காரர் ஐ வினோத் (எஸ்டிஏடி), தடுப்பு ஆட்டக்காரர் அக்ஷய் (தமிழ்நாடு ஹாக்கி யூனிட்), நடுகள ஆட்டக்காரர் எஸ்.மணிகண்டன் (வருமானவரி), கோல்கீப்பர் அருண் பிரசாத் (வருமான வரி) ஆகியோருக்கு சிறந்த வீரர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் தொடரின் ஆல்-ரவுண்டராக தினேஷ்குமார் ( எஸ்டிஏடி) தேர்வு செய்யப்பட்டார்.