இளம் இந்திய கால்பந்து  விளையாட்டாளர்களை  உருவாக்கும் மிஃபா

ரெ. மாலினி

மலாக்கா, பிப். 28-

இளம் இந்தியக் கால்பந்து விளையாட்டாளர்களின் திறமைகளை அடையாளம் காட்டும் வகையில்  மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின் (மிஃபா) ஏற்பாட்டில் 2ஆவது முறையாக 14 வயதிற்குட்பட்ட  தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி மலாக்கா, குருபோங் விஸ்மா மாபா பாடாங் 10இல் இரு தினங்களுக்கு விமரிசையாக நடைபெற்றது.

 நாடு தழுவிய நிலையிலிருந்து 23 ஆண்கள் அணியினரும் 9 பெண்கள்  அணியினரும் பங்குகொண்டு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய மாணவர்கள் கால்பந்துத் துறையில் கோலோச்சி மாநிலத்தையும்  நாட்டையும்  பிரதிநிதித்து விளையாட வேண்டும் என்ற கனவும் அதனை நனவாக்க வேண்டும் என்ற வேட்கையும்  மலேசிய இந்தியக் கால்பந்து சங்கத்தின் லட்சியமாக உள்ளது.

நமது பிள்ளைகள் அனைவருமே திறமைசாளிகள். அவர்களுக்கு ஆதரவும் ஊக்குவிப்பும் கொடுக்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக பெற்றோர் பிள்ளைகளின் திறமையை வெளியே கொண்டு வர ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும். தற்போது அதிகமான பெண்கள்  கால்பந்து விளையாட்டில் கால் ஊன்றி வருகின்றனர். அவர்களின் திறமைகள் ஆண்  விளையாட்டாளர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. அவர்களிடம் புதைந்து கிடக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர இது ஒரு சிறந்த களமாக விளங்குகிறது.

எதிர்காலத்தில் பெண்  விளையாட்டாளர்களுக்குப் பெண் பயிற்றுநர்கள் பயிற்சி அளிக்க  வேண்டும் என்ற நோக்கமும் நமக்கு உண்டு. அந்த வகையில்  இந்தியப் பெண்கள் மத்தியில் சிறந்த கால்பந்து பயிற்றுநர்களை உருவாக்க சிறந்த விளையாட்டர்களை  அடையாளம் காண்பதில் முனைப்புக் காட்டும் என அதன்  தலைவர் கே. வி. அன்பானந்தன்  கூறினார்.

கால்பந்து  விளையாட்டாளர்களின் சிறந்த பங்களிப்பு, பயிற்றுநர்களின் கண்காணிப்பு, பெற்றோரின் ஊக்குவிப்பு, ஆதரவாளர்களின் சிறந்த ஒத்துழைப்பு காரணமாக இந்த விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது என மலாக்கா இந்தியக் கால்பந்து சங்கத்தின் தலைவர்  டத்தோ பதி சுப்பையா கூறினார்.

கால்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த பட்டர்வொர்த் – ரேஞ்சர் வென்றது. இரண்டாவது பரிசை சிலாங்கூர் பிளேக் ஹண்டர்ஸ் வென்றது. மூன்றாது பரிசை  பேராக் – டிஐஏ கால்பந்து குழு வென்றது. மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த கே.ஆர். 7 அணி  நான்காவது பரிசை வென்றது.

பெண்கள் அணியில் முதல் பரிசை ஜோகூர், குளுவாங் பெர்ச த்து இந்திய கால்பந்து கிளப் வென்றது.

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த எஸ்பிடி இந்தியர் குழுஇரண்டாவது இடத்தையும்  கெடாவைச் சேர்ந்த கடாரம் மூடா குழு  மூன்றாவது நிலையையும்  மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த ஏஎம்ஏ கால்ந்துக் குழு  நான்காவது இடத்தையும் வென்றன.

கால்பந்துத் துறையில் இந்தியர்களின் சாதனைப் பட்டியல் பல வரலாற்று சுவடுகளைப் பதிந்துள்ளது நமக்கு கிடைத்த பெருமையாகும். அந்த வகையில் மலேசிய இந்தியக் கால்பந்து சங்கம் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பெற்றோர் ஆதரவு நல்க வேண்டும். வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைச் சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கடமையாகும் என மலாக்கா மாநில விளையாட்டு, அரசு சாரா இயக்கங்களின் ஆட்சிக் குழு உறுப்பினரும் காடேக் சட்ட மன்ற உறுப்பினருமான பி. சண்முகம் விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here