மணிலா, டிச. 3-
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 30ஆவது சீ போட்டியில் சிங்கப்பூர் முதல் நாளில் 3 தங்கத்தை வென்றது. வூசு போட்டியில் முதல் தங்கத்தை யோங் யி சியாங் பெற்றுத் தந்தார்.
அதன் பின்னர் பெண்களுக்கான தரைப்பந்துப் போட்டி இறுதியாட்டத்தில் சிங்கப்பூர் 3-2 என்ற கோல்கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி 2ஆவது தங்கத்தை வென்றது.
இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக முடிந்தது. நீண்ட நேரம் சமநிலையில் இருந்த ஆட்டம் இறுதி கட்டத்தில் சிங்கப்பூர் பக்கம் திரும்பியது. போட்டி முடிய சுமார் ஐந்து நிமிடங்கள் இருந்தபோது இரு தரப்பிலும் மாறி மாறி கோல்கள் விழுந்தன. இதனால் ஆட்டம் 2-2இல் இருந்தது. ஆனால், இறுதிக் கட்டத்தில் ஜெரலீ ஓங் சிங்கப்பூருக்கான 3ஆவது வெற்றி கோலை அடித்தார். இந்த வெற்றி மூலம் சிங்கப்பூர் அணி தங்கப்பதக்கத்தைக் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
2015ஆம் ஆண்டு சீ விளையாட்டுகளில் பெண்கள் தரைப் பந்துப் போட்டி அணி அறிமுகம் கண்டது. இம்முறையும் இறுதிப் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி சிங்கப்பூர் சாதனை படைத்துள்ளது. இதனிடையே, பெண்களுக்கான பனிசறுக்குப் போட்டியில் சிங்கப்பூருக்கு 3ஆவது தங்கத்தை இளம் வீராங்கனை குளோ இங் பெற்றுத் தந்தார். 21 வயதான இவர் தனது சாகசத்தைக் காட்டி 152.67 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.
பிலிப்பைன்ஸ் வீராங்கனை எலிசன் பார்ட்டினோ 137.76 புள்ளிகளுடன் வெள்ளியும் பெற்றார். 2017இல் கோலாலம்பூரில் நடந்த சீ போட்டியில் பனி சறுக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை குளோ இங் இம்முறை தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.