வெங்காயம், காய்கறிகள் – கிடு கிடு விலை உயர்வு!

பந்திங் –

தற்போது நாட்டில் பெய்து வரும் தொடர் அடைமழையால் சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும் பயனீட்டாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தையில் தற்போது முக்கிய காய்கறிகளான தக்காளிப் பழம் கிலோ ஐந்து வெள்ளிக்கும் பீன்ஸ் 12 வெள்ளி, பாகற்காய் 8 வெள்ளி, கத்திரிக்காய் 8 வெள்ளி, பீர்க்கங்காய் 8 வெள்ளி, இஞ்சி 10 வெள்ளி, என்று விற்க வேண்டிய நிலையில் இருப்பதாக பந்திங் பெரிய மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் முனியாண்டி தெரிவித்தார்.

மேலும் வெண்டை 8 வெள்ளி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகோஸ் 6 வெள்ளி, உள்ளூர் முட்டைகோஸ் 5 வெள்ளி, பயிற்றரங்காய் 8 வெள்ளி, பழுத்த மிளகாய் 11 வெள்ளி, பச்சை மிள்காய் 10 வெள்ளி என்பதோடு இதர காய்கறிகளும் கீரை வகைகளும் கணிசமான அளவில் விலை உயர்ந்திருப்பதாகவும் இந்தக் காய்கறிகளின் விலை உயர்வால் வழக்கமான வியாபாரத்தைவிட தற்போது வியாபாரம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மழைக்காலம் தொடங்கி விட்டதால் காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதாகவும் எனவே தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதலான விலைக்கே விற்க வேண்டியிருப்பதால் வியாபாரம் குறைந்துள்ளதோடு பயனீட்டாளர்களின் வாங்கும் சக்தியும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளில் விரைவில் அழுகிப் போகக் கூடிய தக்காளிப் பழம், பழுத்த மிளகாய் போன்றவை ஒரு சில நாட்களில் விற்க வேண்டியுள்ளது. மேலும் காகிதப் பெட்டிகளில் வரும் தக்காளிப் பழம் போன்ற காய்கறிகள் பெட்டிகளைப் பிரிக்கும்போது சில கெட்டுப் போயிருக்கும். இந்த நிலையில் வாங்கியவற்றை மீண்டும் மாற்ற முடியாது என்பதால் இந்தச் சுமையை சில்லறை வியாபாரிகளே ஏற்க வேண்டிருக்கும் என்பதால் கொள்முதல் செய்த பணம் திரும்பக் கிடைத்தாலே போதும் என்ற அடிப்படையில் விற்க நேரிடும் என்பதோடு சில சமயங்களில் நஷ்டத்தையும் எதிர்நோக்க வேண்டியிருப்பதாக முனியாண்டி குறிப்பிட்டார்.

அதோடு கடல் உணவு வகைகளான மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவையும் வழக்கத்தைவிட அதிகமான விலைக்கு விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. ஈரச் சந்தையில் பயனீட்டாளர்கள் விரும்பி வாங்கும் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 34 வெள்ளியிலிருந்து 36 வெள்ளி வரை விற்கப்படுகிறது.
மேலும் வவ்வால் மீன் 28 வெள்ளி, பெரிய இறால் 38 வெள்ளி, நண்டு 34 வெள்ளி, கெம்போங் மீன் 18 வெள்ளி என்பதோடு இதர மீன் வகைகளும் கணிசமான அளவில் விலை உயர்வு கண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே இந்திய அரசாங்கம் அதனுடைய வெங்காய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளதால் அந்நாட்டின் பெரிய வெங்காய, சின்ன வெங்காய விலைகளும் சந்தைகளில் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. முன்பு 2 வெள்ளியிலிருந்து 2 வெள்ளி 50 காசு என விற்கப்பட்ட இந்தியாவின் பெரிய வெங்காயம் தற்போது நான்கு வெள்ளிக்கு விற்க வேண்டியிருப்பதாக பந்திங்கில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சண்முகம் பிள்ளை பல சரக்குக் கடை உரிமையாளரான ரவி தெரிவித்தார்.

மேலும் முன்பு 5 வெள்ளியிலிருந்து 6 வெள்ளி வரை விற்கப்பட்டு வந்த சிறிய வெங்காயம் தற்போது 13 வெள்ளிக்கு விற்க வேண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப் பூண்டு முன்பு ஐந்து வெள்ளிக்கு விற்கப்பட்டு வந்ததாகவும் தற்போது இந்த வகை பூண்டு 9 வெள்ளிக்கும் ஹாலந்து நாட்டின் உருளைக்கிழங்கு 3 வெள்ளிக்கும் விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரவி தெரிவித்தார்.

எனினும் ஒரு பல சரக்குக் கடையில் இதுபோன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனையை நிறுத்த முடியாது என்பதால் குறைந்த லாபமோ நஷ்டமோ வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சந்தையில் இவ்வாறான உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் குறைந்த வருமானம் பெறுபவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் தொடர் அடைமழையால் சந்தையில் காய்கறிகள், கடல் உணவுகள், போன்றவற்றோடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வு இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை என்பதால் பயனீட்டாளர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here