ஜோகூர் பாரு:
சிங்கப்பூரின் உலகப் புகழ்பெற்ற பிரெட் தயாரிப்பு நிறுவனமான கார்டேனியா (Gardenia Malaysia), தங்களது உற்பத்தி ஆலையைச் சிங்கப்பூரின் ‘பாண்டான் லூப்’ (Pandan Loop) பகுதியிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவிற்கு மாற்றப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் சிங்கப்பூரில் 141 ஊழியர்கள் பணிநீக்கம் (Retrenchment) செய்யப்பட்டுள்ளனர்.
கார்டேனியாவின் இந்த முடிவு, ஏதோ ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட இடமாற்றம் அல்ல; மாறாகச் சிங்கப்பூர் பெருநிறுவனங்கள் ஜோகூர் மாநிலத்தை நோக்கித் தங்களது உற்பத்தி ஆலைகளை நகர்த்தும் ஒரு “மாபெரும் கட்டமைப்பு மாற்றத்தின்” (Structural Shift) தொடக்கம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கார்டேனியா பிராண்டின் உரிமையாளரான சிங்கப்பூர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ‘கியூஏஎஃப் குரூப்’ (QAF Group), ஜோகூரின் செனாய் தொழில்பேட்டையில் ஏற்கனவே ஒரு பிரம்மாண்ட ஆலையை இயக்கி வருகிறது. துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலத்திலிருந்து (Tuas Second Link) வெறும் 45 கி.மீ தொலைவில் உள்ள இந்த அதிநவீன ஆலையில், ஒரு மணி நேரத்திற்கு 8,000 பிரெட் லோஃப்கள் மற்றும் 20,000 டொர்டில்லா வ்ராப்களை (Tortilla Wraps) உற்பத்தி செய்ய முடியும். உலகளாவிய சந்தை சவால்களை எதிர்கொள்ளவும், உற்பத்திச் செலவைக் குறைத்துத் திறனை மேம்படுத்தவுமே இந்த இடமாற்றம் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கார்டேனியாவைப் போல மற்ற முன்னணி நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை மலேசியாவிற்கு மாற்றி வருகின்றன:
Yeo’s (யோஸ்) நிறுவனம், கடந்த மார்ச் மாதம் தனது சிங்கப்பூர் உற்பத்தியைக் குறைத்து, மலேசியாவிற்கு மாற்றியதால் சிங்கப்பூரில் 25 ஊழியர்கள் வேலையிழந்தனர்.
அதேபோல் APBS -டைகர் பியர் தயாரிப்பு நிறுவனம், சிங்கப்பூரில் 130 வேலைவாய்ப்புகளைக் குறைத்துவிட்டு, உற்பத்தி ஆலைகளை மலேசியா மற்றும் வியட்நாமிற்கு மாற்றி வருகிறது.
“நிறுவனங்கள் தாங்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஜோகூரில் குறைந்த செலவில் தயாரித்து, தினசரி லோரிகள் மூலம் புதிய தயாரிப்புகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வர முடியும்” என்கிறார் ஒலிவ் ட்ரீ சொத்து ஆலோசகர் சாமுவேல் டான்.
மேலும் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (JS-SEZ) கீழ், நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு வெறும் 5% மட்டுமே கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது. இது மலேசியாவின் சாதாரண வரி விகிதமான 24%-ஐ விட மிகக் குறைவு என்பதால் நிறுவனங்கள் படையெடுக்கின்றன.
சிங்கப்பூர் உற்பத்திச் கூட்டமைப்பின் (SMF) தலைவர் லெனான் டான் கூறுகையில், “நிறுவனங்கள் தங்களது தலைமையகம், பிராண்ட் கண்டுபிடிப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையைச் சிங்கப்பூரிலேயே வைத்திருக்கும். கடினமான உற்பத்திப் பணிகளை (Heavy Lifting) மட்டுமே ஜோகூருக்கு மாற்றுகின்றன” என்றார். இதனால்தான் இந்த உறவை 1990-களின் ‘ஹாங்காங் – ஷென்சென்’ (Hong Kong – Shenzhen) பொருளாதாரப் பிணைப்புடன் பொருளாதார நிபுணர்கள் ஒப்பிடுகின்றனர்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ஜோகூர் மாநிலம் 2025-ஆம் ஆண்டிற்கான முதலீடுகளில் 110 பில்லியன் ரிங்கிட் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இது மலேசிய மாநிலங்களிலேயே மிக அதிகப்படியான முதலீடாகும். இதன் மூலம் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதில் சில சவால்களும் எழுந்துள்ளன: அதில் ஜோகூரின் அதிவேக டேட்டா சென்டர் (Data Centre) வளர்ச்சியால் மின்சாரம் மற்றும் தண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், செயற்கை நுண்ணறிவு (AI) சாராத டேட்டா சென்டர் விண்ணப்பங்களைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புத்ராஜெயா நிராகரிக்கத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் திறமையான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு ஊதியம் உயரும் என்றும், தொழில்பேட்டை நிலங்களின் வாடகை அதிகரிக்கும் என்றும் தெற்கு ஜோகூர் SME சங்கம் எச்சரித்துள்ளது.
வேலைவாய்ப்புகள் ஜோகூருக்கு வந்தாலும், சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்குமான ஊதிய இடைவெளி இன்னும் குறையவில்லை. ஜோகூரில் ஒரு உற்பத்தித் துறை வேலைக்கு RM 3,000 முதல் RM 5,000 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால், அதே வேலைக்குச் சிங்கப்பூரில் S$ 2,000 (சுமார் RM 6,200) வரை கிடைப்பதாகப் பாசிர் கூடாங்கில் உள்ள யோஸ் நிறுவன ஊழியர் ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் விண்வெளி மற்றும் செமிகண்டக்டர் போன்ற உயர் மதிப்புத் துறைகள் சிங்கப்பூரிலேயே நீடிக்கும் என்றும், உணவு மற்றும் இலகுரக உற்பத்தித் துறைகள் (Light Manufacturing) பெருமளவில் ஜோகூருக்கு இடம்பெயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




















