சென்னை 23 –
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல், பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
சூரியனின் மையப்பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல ஒளி தெரிகிறபோது, அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வ நிகழ்வு ஆகும்.
இந்த வளைய சூரிய கிரகணம், வருகிற 26ஆம் தேதி (வியாழக்கிழமை) நிகழ்கிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்தின் தென் பகுதி, கேரளாவின் வடபகுதியிலும் இந்தச் சூரிய கிரகணம் தெரியும். தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். 26ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் 11.16 மணி வரை இதைப் பார்க்க முடியும்.
தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். இதற்காக தமிழகத்தில் 11 இடங்களில் விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை ஏற்பாடு செய்து இருக்கிறது.
இதுகுறித்து விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி டி.வி.வெங்கடேஷ்வரன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் ஆகியோர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் பொங்கல் தினத்தன்று சூரிய கிரகணம் தெரிந்தது. அப்போது அதனைப் பொங்கல் சூரிய கிரகணம் என்று அழைத்தோம். அதன்பிறகு தற்போது இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சூரிய கிரகணம் தெரிய உள்ளதால் இதனைக் கிறிஸ்துமஸ் சூரிய கிரகணம் என அழைக்கிறோம்.
இந்தச் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாகப் பார்க்க வேண்டும். அதற்காகத் தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களிலும் பகுதியாகத் தெரியும் சென்னையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது என்று சொல்வது தவறு.
இதற்கு அடுத்து 2020ஆம் ஆண்டு அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் அதற்கு அடுத்தபடியாக 2031ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.