சோமாலியாவில் 100 பேர் பலி!

மோகாடிஷூ –

சோமாலியா நாட்டின் தலைநகர் மோகாடிஷூவில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த லோரியொன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் கிட்டத்தட்ட நூறு பேர் உயிரிழந்ததோடு மேலும் தொண்ணூறு பேர் காயமுற்றனர். அந்த பலத்த வெடிப்பில் ஏராளமான வாகனங்களும் சேதமுற்றன.

இந்த கொடூரமான தாக்குதலில் நூறு பேர் வரை மாண்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. மோகாடிஷூ நகரில் உள்ள ஷாஃபி மருத்துவனைக்கு எட்டு பேரின் உடல்களும் அந்நகரிலுள்ள மெடினா மருத்துவமனைக்கு எழுபத்து மூன்று பேரின் உடல்களும் இதர மருத்துவமனைகளுக்கு மேலும் சிலரின் உடல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்று மாநகர காவல்துறை அதிகாரி அகமது பாஷானி குறிப்பிட்டார்.

அச்சம்பவத்தில் மாணவர்கள் உட்பட தொண்ணூறு பேர் காயமுற்றுள்ளனர் என்று மாநகர மேயர் உமர் முகம்மது ஃபிலிஸ் குறிப்பிட்டார். மோகாடிஷூவில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியொன்றில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலையில் அந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சோதனைச் சாவடியொன்றின் அருகே அந்த லோரி வெடித்தது. அப்பகுதியே போரினால் நாசமான இடம்போல் காணப்பட்டது என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். அத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அல்-ஷபாப் எனும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் கோடிக்காட்டினர்.

மனித மாண்புக்கு எதிரானவர்கள் தாக்குதலை நடத்தியிருக்கும் வேளையில், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று சோமாலியா நாட்டின் அதிபர் முகம்மது அப்துல்லாஹி ஃபார்மாஜோ குறிப்பிட்டார். அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகக் கொல்வதுதான் பயங்கரவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

மோகாடிஷூ மாநகரில் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்று கொண்டிருந்த நேரத்திலும் பெரியவர்கள் கடைகளுக்குப் பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்த நேரத்திலும் அத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அவ்வழியே சென்று கொண்டிருந்த இரண்டு சிறுரகப் பேருந்துகள் அந்த பயங்கர வெடிப்பில் சிக்கி சின்னாப் பின்னமானது என்றும் அவர் சொன்னார்.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் தெற்கிலும் மத்தியிலும் பெரும் நிலப்பரப்பை அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் மீதும் பொதுமக்கள் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதத் தாக்குதலை ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டானோனியோ கட்டாரெஸ் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளார்.

அந்தக் கொடிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கவே கூடாது என்று அவர் குறிப்பிட்டார். உயிருடற்சேதத்திற்கு ஆளானவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டார். அதுவொரு காட்டுமிராண்டித் தாக்குதல் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here