பூசணிப் பூ

பூசணி கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகமாகப் படர்ந்து மிகுதியாகப் பூக்கும். இது கொடியாகத் தரையில் படரும், கூரை வீடுகள் மீது ஏறிப் படர்வதும் அதிகமாக இருக்கும். கொடியின் தண்டுகள் குழல் போன்றவை இலைகள் அகலமாக இருக்கும். காய்கள் பெரிய அளவிலானவை.

பூசணிப்பூ பொன் மஞ்சள் நிறமானது. இந்திரனுக்குப் பிரியமானது. மழை மேகங்களுக்கு இடையே தோன்றும் இடியின் தேவதைகளே பூமியில் பூசணிக் கொடியாகவும் மலராகவும் தோன்றுகின்றன என்று நம்புகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் வீட்டுவாசலில் (வழக்கத்தை விட) பெரிய பெரிய கோலங்களை இட்டு அதை வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்வர். அதன் நடுவில் சாண உருண்டைகளைப் பிடித்து வைத்து அதன் மீது பூசணிப் பூக்களைப் பொருத்தி வைக்கின்றனர்.

சாண உருண்டை மீது பூசணிப் பூக்களை வைப்பதற்குப் பலவிதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. சாணமும் அது மெழுகிய இடமும் லட்சுமியின் வாசஸ்தலமாகும். லட்சுமியை வரவேற்கும் வகையில் வீட்டு முற்றத்தைச் சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு இந்திரனுடன் அவளை வரவேற்கவே இந்திர மேக மலரான பூசணிப் பூக்களை வைக்கிறோம் என்கின்றனர். இடிகள் சாணக் குவியல்கள் மீது விருப்பமுடன் பாய்ந்திருக்கும் என்பதால் இடியின் மலர்களான பூசணிப் பூக்களைச் சாண உருண்டையின் மீது பொருத்தி வைக்கின்றனர் என்பர். இவ்வழக்கத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தச் சாண உருண்டைகளை முற்பகலுக்கு மேல் எடுத்துச் சுவரில் பூவுடன் சேர்த்து வரட்டியாகத் தட்டுவர். அது காய்ந்ததும் எடுத்துச் சேகரித்து வைத்து தைப்பொங்கல் நாளில் மூட்டும் அடுப்புத்தீக்கு எரிபொருளாகப் பயன் படுத்துகின்றனர். பொங்கலின் போது பெரிய சல்லடையில் பூசணி இலைகளில் பொங்கலை வைத்துப் படைப்பதே பெரு வழக்கமாகும். இந்திரன் ஆயிரம் கண்களை உடையவன். சல்லடைக்கும் ஆயிரம் கண்கள் இதனால் சல்லடையை இந்திரனின் வடிவமென்று கருதுகின்றனர்.

சல்லடையில் பூசணி இலைகளை வைத்து அதில் பொங்கலை இட்டுத் தெய்வங்களுக்குப் படைக்கின்றனர். போகியும் பொங்கலும் இந்திரனோடு தொடர்புடையவையாகும். பூசணியில் பலவகை உள்ளன. நாட்டுப் பூசணி, கல்யாண பூசணி ஆகியவை முக்கியமானவை. கல்யாண பூசணிக் காயை இந்திரனின் யானையான ஐராவதத்திற்கு ஒப்புமையாகக் கூறுவர். அதைத் தெய்வங்களுக்குப் பலியாக அளிக்கின்றனர். அதனால் அதைத் தேவையின்றி வெட்டிக் கூறுபோடக் கூடாது. கல்யாண பூசணி திருஷ்டி தோஷங்களைப் போக்குவது அதனால் அதைத் திருஷ்டி நீங்க வீட்டின் வாயிலில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அது தீய சக்திகளை அமானுஷ்ய தீமை செய்யும் எண்ணக் கதிர்களை இழுத்து அழிப்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here