கொழும்பு:
அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேக்கு, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது.
76 வயதான ரணில், கைது செய்யப்பட்ட பின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், Zoom வழியாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார்.
இதற்கிடையில், கொழும்பின் மையப்பகுதியில் அமைந்திருந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரும் திரண்டனர்.
ரணிலுக்கு பிணை வழங்கிய தீர்ப்பு, இலங்கை நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதை வெளிப்படுத்துவதாக, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைச் செயலாளர் விராஜ் கரியவாசம் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ரணில் குற்றமற்றவர் என்றும், அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டது என்றும் யூ.என்.பி தெரிவித்தது.
எனினும், அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.





















